விதர்ப்ப தேசத்தை ஆண்டு விரோசனனுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் காஞ்சிபுரம் வந்து கைலாசநாதருக்கு பூஜை செய்து வழிபட்டான். அவரது அருளால் மகாவிஷ்ணுவின் துவாரபாலகர்கள் இருவரும் மகன்களாகப் பிறந்தனர். பல்லவன், வில்லவன் என்னும் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டபடி பெருமாள் ஸ்ரீவைகுண்ட நாதனாக ஸேவை சாதித்தார். பரமேச்சுரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டதால் இந்த ஸ்தலம் 'திருப்பரமேச்சுர விண்ணகரம்' என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலவர் பரமபதநாதன், வைகுந்தநாதன் என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு வைகுந்தவல்லி நாச்சியார் என்பது திருநாமம். பல்லவராஜனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. தரை தளத்தில் வீற்றிருந்த கோலத்திலும், நடு தளத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சயனத் திருக்கோலத்திலும், மேல் அடுக்கில் நின்ற திருக்கோலத்திலும் பெருமாள் ஸேவை சாதிக்கின்றார்.
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|